Saturday, 1 October 2011

மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி!

ரஷிய நாட்டின் உதவியோடு கூடங்குளத்தில் நிறுவப்பட்டிருக்கும் அணுமின் நிலையம் திடீரென்று அங்கு வந்துவிடவில்லை. ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜுன சாகரிலும், கர்நாடக மாநிலத்தில் கைக்காவிலும் கேரளத்தில் பூதகான்கெட்டு என்ற இடத்திலும் தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டு இருந்த அணுமின் நிலையங்கள் அந்தந்த மாநில மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டன.

 ஆனால், 1992-ம் ஆண்டு தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு கூடியபோது கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பது என்றும் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்வது என்றும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு முடிவு செய்தது.
 இத்திட்டத்துக்கு இசைவளித்ததன் மூலம் தமிழக மக்களை அணு அபாயத்துக்கு உள்ளாக்கிய தவற்றினை தமிழக அரசு செய்துவிட்டது. தொடர்ந்து பதவியிலிருந்த தமிழக அரசுகள் எதுவும் இத்திட்டத்துக்கு எதிராக எதுவும் கூறவில்லை, செய்யவில்லை.
 தங்கள் மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக்கு அடிபணிந்து அணு உலைத் திட்டங்களைக் கைவிட்ட, ஆந்திர, கர்நாடக, கேரள அரசுகள் தமிழ்நாட்டில் அணு உலைகள் நிறுவுவதில் அக்கறை காட்டி ஓரளவு நிதியுதவி செய்யவும் முன்வந்தது தங்களது சுயநலத்துக்காக என்பதைத் தமிழக அரசு அன்று உணரவில்லை.
 அணு உலை அபாயம் ஏற்பட்டால் அதிலிருந்து தங்கள் மாநில மக்களைக் காப்பாற்றிக் கொள்வதோடு தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இம் மாநிலங்களின் சதித்திட்டங்களின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியாமல், இந்திய அரசின் நெருக்குதலுக்கு உள்பட்டு இதற்கு இணங்கியது தமிழக அரசின் தவறாகும். இந்தியாவில் இயங்கி வரும் அணு மின் உலைகள் வெற்றிகரமாகச் செயல்படவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும்.
 உலகம் முழுவதும் பயன்படும் மின்சக்தியில் அணுசக்தி மூலம் கிடைப்பது 4 விழுக்காடுதான். இதற்கென அரசுகள் பெரிய அளவுக்கு உதவி செய்தாலும் கடந்த 15 ஆண்டுகளாக இந்த 4 விழுக்காட்டில் முன்னேற்றம் இல்லை. பயன்பாடு இவ்வளவு சிறிதாக இருக்கும்போது இந்த நச்சரவத்தை மடியில் போட்டுக்கொள்ளத் துடிப்பது ஏன்?
 உலைகளைக் குளிர்விக்கும் கதிர்வீச்சுக் கலந்த தண்ணீரையும் உப்பு அகற்றும் ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு மற்றும் ரசாயனங்களையும் கடலில் கொட்டி ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கும் முயற்சியே இதுவாகும். கடல் வாழ் உயிரினங்களை நம்பி வாழ்கிற மீனவர்களின் கதி என்ன?
 கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கினால் அதைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவு வரை அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த வீடுகளிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வெளியேற நேரிடும்.
 இதைத் தவிர, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உவரியிலிருந்து குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் வரையில் உள்ள சுமார் 75 கிலோ மீட்டர் கடற்கரைப் பகுதி நெடுகிலும் வாழும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
 அணு சக்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சால் கடற்கரையும் கடலும் பாதிக்கப்படும்போது அங்கு வாழும் உயிரினங்களும், பெரும் பாதிப்புக்குள்ளாகும். 3 லட்சத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தங்கள் பிழைப்பை இழப்பதுடன் வாழையடிவாழையாக வாழ்ந்த தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும்.
 கூடங்குளத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து அணுமின் நிலையத்துக்குத் தேவையான தண்ணீர் கொண்டு போகப்படும். கிணற்றுப் பாசனவசதி அதிகமில்லாத குமரி மாவட்ட மக்கள் விவசாயத்துக்கு பேச்சிப்பாறை - பெருஞ்சாணி அணைகளின் நீரைத்தான் நம்பியிருக்கிறார்கள். இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால் இந்த நிலங்கள் போதுமான நீர்வளமில்லாமல் வறண்டு போகும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
 கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ. சுற்றளவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை முழுவதுமாக வெளியேற்றுவதோ, பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளைச் செய்வதோ, மருத்துவம், கல்வி வசதிகள் அமைத்துத் தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ எந்த அரசாலும் செய்யமுடியாத காரியமாகும்.
 கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கிடைக்கும் அணுக்கழிவிலிருந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவும் புளுட்டோனியம் எடுக்கப்படுகிறது. எனவே, இந்த அணுக்கழிவு மிக முக்கியமானது.
 கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய இரு அணு மின் நிலையங்களில் மட்டும் ஆண்டுக்கு தலா 1,000 கிலோ புளுட்டோனியம் உற்பத்தியாகிறது. 3 தேக்கரண்டி புளுட்டோனியம் மூலம் 900 கோடி பேருக்குப் புற்றுநோயை ஏற்படுத்த முடியும் என்ற நிலையில் மேலும் மேலும் சேரும் புளுட்டோனியத்தை என்ன செய்வது? புளுட்டோனியத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் வேக அணு ஈனுலைக்கான எரிபொருள் சாதாரண யுரேனியத்தைவிட 5 முதல் 10 மடங்கு விலை அதிகமாகும்.
 அணு உலைக் கழிவு ஒரு பெரிய பிரச்னையாகும். கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவு ரஷியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், அது இந்தியாவிலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கூடங்குளம் அணுஉலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தைப் பயன்படுத்தும்.
 ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும்போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்தக் கொடிய நச்சை, 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு நாம் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளைத் தேக்கி வைத்திருப்பதாலும், மறுசுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும் காற்றும் பாதிக்கப்படும்.
 நமது விளைநிலங்களும் பயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றிலிருந்து பெறப்படுகிற பால், பழங்கள், காய்கறிகள் நச்சு உணவுகளாக மாறும். கதிர்வீச்சுக் கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் மீன்வளம் பெரிதும் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும் வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். அணு உலையின் புகைப்போக்கிகளிலிருந்து வெளிவரும் நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின், சிசிஎம், ஐசோடோப்புகள் போன்ற கதிர்வீச்சு நிறைந்த பொருள்கள் நமது உணவில், குடிநீரில், சுவாசத்தில், வேர்வையில் கலந்து மக்கள் வதைக்கப்படுவார்கள். நமது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும்கூட நீண்ட காலத்துக்குப் பாதிக்கப்படுவார்கள்.
 கூடங்குளம் அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் என்ன நேரும் என்பது பற்றி டாக்டர் சிவாஜிராவ் என்ற அணு விஞ்ஞானி வெளியிட்ட கருத்துகளின் அடிப்படையில் 21-4-90 தேதியிட்ட "தினமணி' நாளிதழ் தனது தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது.
 ""கூடங்குளம் அணுமின் உலை வெடித்தால் 140 கிலோமீட்டர் தொலைவு வரை வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்களுக்கும் கால்நடைகளுக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளுக்கும் 20 ஆண்டுகள் வரை ஏற்படக்கூடிய பேரிழப்புகளை இங்கிலாந்து நாட்டு சைஸ்வெல் அறிக்கையிலிருந்து ஒருவாறு நாம் ஊகித்து உணரலாம்.
 விபத்து நடந்த இடத்திலிருந்து 140 கி.மீ. தொலைவு வரை வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். விபத்துக்குப் பிறகு 77 கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும் 115 கிலோமீட்டர் வரை 5 ஆண்டுகளுக்கும் 140 கி.மீ. வரை ஓராண்டு காலத்துக்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பவே முடியாது.
 திருநெல்வேலியும் மற்றும் பல மக்கள் நெருக்கமாக வாழும் ஊர்களும் கூடங்குளத்திலிருந்து 77 கி.மீ. தொலைவுக்குள் இருக்கின்றன. தூத்துக்குடியும் மற்றும் பல ஊர்களும் 115 கி.மீ. தொலைவுக்கும், சாத்தூர் போன்ற பல ஊர்கள் 140 கி.மீ. தொலைவுக்குள்ளும் அமைந்துள்ளன.
 கேரளத்தில் இருக்கும் திருவனந்தபுரம், கொல்லத்தின் புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்ட பெரிய ஊர்கள் 140 கி.மீ. அபாய எல்லைக்குள் அடங்கியுள்ளன. கூடங்குளத்தில் அணு உலை வெடித்தால் மேற்கண்ட நகரங்களும், கிராமங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
 எல்லா வகையிலும் பாதுகாப்பு வாய்ந்த அணு உலை அமைக்கப்படுகிறது என்றே வைத்துக்கொண்டாலும், அவற்றிலிருந்து வெளியேறும் அணுக்கழிவை அகற்றுவது என்பது மிகப்பெரிய பிரச்னையாகும். இதற்கான பாதுகாப்பான முறையை இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவேயில்லை. அணு உலை ஒன்றின் ஆயுள்காலம் சுமார் 25 ஆண்டுகாலம் மட்டுமே. இதைக் கட்டி முடிக்க 15 ஆண்டுகள் ஆகும். அணு உலையில் உள்ள எரிபொருளைப் பத்திரமாகப் பிரித்தெடுக்க 5 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு தொலைவில் இருந்து இயங்கும் கருவிகள் ரோபாட்டுகள் ஆகியவற்றின் மூலம் அணு உலையைப் பிரிப்பதற்கு 10 - 15 ஆண்டுகள் ஆகும்.
 அணு உலையைப் பிரிப்பதற்குப் பதில், பெரும் பொருள்செலவில் அணுஉலைக்கு காங்கிரீட்டினால் ஆன சமாதியைக் கட்டலாம் என்றும் ஒரு யோசனை கூறப்படுகிறது. அப்படியே கட்டினாலும் இதற்குள் உள்ள கதிரியக்கம் தணிவதற்கு 130 ஆண்டுகள் ஆகும். அதற்குப் பின்தான் அதைப் பிரிப்பது பாதுகாப்பாக இருக்கும் என்று விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.''
 இந்தியாவில் உள்ள அணு உலைகளில் குவிந்துவரும் அணுக்கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை நம்முடைய அணு விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும். நமது நாட்டைவிட எத்தனையோ மடங்கு விஞ்ஞானமும், தொழில் வளர்ச்சியும் அடைந்த ஜெர்மனி 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து அணுஉலைகளையும் மூடிவிட முடிவெடுத்துள்ளது.
 இத்தாலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90 சதவீதம் மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகளும் அணுஉலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன.
 புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் 10 அணு உலைகளின் வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
 கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணுமின் நிலையத் திட்டம் தங்களின் கொலைக்களமாக ஆகிவிடுமோ என்ற அச்சமும் கவலையும் தென் மாவட்டங்களில் வாழும் மக்களை ஆட்டிப்படைத்ததன் விளைவாகத்தான் அவர்கள் போராடினார்கள்.
 உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்துப் பேசியபோது, அவர்கள் கோரிக்கையை ஏற்று இப் பிரச்னை குறித்துத் தமிழக முதல்வர், அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் விளைவாக, உண்ணாவிரதப் போராட்டத்தை போராட்டக் குழுவினர் கைவிட்டனர்.
 மக்களின் போராட்டம் எவ்வளவு வலிமையானது என்பதை கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பான போராட்டம் நிரூபித்துள்ளது. தாங்கள் அணுஉலையால் பெரும் பாதிப்புக்குள்ளாவோம் என அஞ்சிய விவசாயிகளும், மீனவர்களும் ஒன்றுதிரண்டு இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். எந்த அரசியல் கட்சியும் அவர்களைத் தூண்டிவிடவில்லை. தொண்டு நிறுவனங்களும், கிறிஸ்தவ நிறுவனங்களும் இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அர்த்தமில்லாதது.
 மக்களின் மகத்தான எழுச்சியிலிருந்து யாரும் விலகி நிற்க முடியாது. கூடங்குளம் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், ஊழல்கள் ஆகியவற்றுக்கு எதிராக அந்தந்தப் பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடுவார்களேயானால், அந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வலிமை எந்த அரசுக்கும் இருக்க முடியாது. ஜனநாயகத்தில் மக்களே இறுதித் தீர்ப்பை வழங்குபவர்கள் என்பதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்தப் போராட்டம் உணர்த்தியிருக்கிறது.
 நன்றி:தினமணி...

No comments:

Post a Comment