Saturday, 1 October 2011

முறையாகுமா இந்த மொழிக்கலப்பு?

வேளாண்மையில் கலப்புமுறை விளைச்சல் என்பது வரவேற்கத்தக்கதாகலாம். கலப்புத் திருமணங்களும் பாராட்டத்தக்கவையே.

 ஆனால், மொழிக்கலப்பு அத்தகையதாகாது. தமிழில் பிறமொழிக் கலப்பு, காலம்காலமாக நடந்து வருவதுதான். ஆனால், இப்போது தமிழில் ஆங்கிலம் கலப்பதுபோல் இவ்வளவு கேவலமாக முன்னெப்போதும் நடந்ததில்லை.
 ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம்; படித்தவர்க்கு அடையாளம் என்றே இப்போதும் பலர் கருதுகிறார்கள்.
 பாதித்தமிழ் மீதி ஆங்கிலம், ஆங்கிலத்தில் தொடங்கித் தமிழில் முடிப்பது, தமிழில் தொடங்கி இடைஇடையே ஆங்கிலச் சொற்களைக் கலப்பது என்று பல போக்கில் தமிழர்கள் பேசி வருகிறார்கள்.
 சோறு என்று சொல்லவும் தமிழன் வெட்கப்படுகிறான். தயிர்ச்சோற்றை "கர்டு ரைஸ்' என்பான்; இன்னும் லைம் ரைஸ், ஒயிட் ரைஸ் இப்படியே நீளும்.
 பள்ளிப் பிள்ளைகள் வீட்டிலிருந்து புறப்படும்போது "அம்மா போயிட்டு வர்றேன்' என்று சொல்லுவதைப் பெற்றோரே இழிவாகக் கருதுகிறார்கள். "மம்மி பை பை', "டாடி பை பை' என்று சொல்லப் பழக்கிவிடுகிறார்கள்.
 மதிய உணவு என்பதைக்கூட "லஞ்ச்' என்று சொல்லக் கட்டாயப்படுத்துகிறார்கள். யாரும் இப்போது வீட்டிலிருந்து விடைபெறும்போது "போய் வருகிறேன்' "என்ன வரட்டுமா?' என்று சொல்லுவதில்லை. எல்லோரும் "டாட்டா, பைபை'தான்.
 "ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே அறிவு வளரும்' என்ற புதிய மூடநம்பிக்கை நாட்டில் பரவிக் கிடக்கிறது. அதனால் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்து விடுவதோடு, வீட்டிலும் ஆங்கிலம் பேசு எனப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்கள்.
 தமிழ்வழிப் பள்ளிகளில் படித்தவர்கள் தாம் நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
 வடக்கே வாழ்பவர்கள், நாம் அவர்களைச் சந்திக்கும்போது நமக்கு இந்தி தெரியாது என்று தெரிந்தும் நம்மோடு இந்தியில்தான் பேசுகிறார்கள்.
 நாம் உடனே, "இந்தி மாலும் நகி' என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறோம்.
 அப்போதும் அவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து விடாதீர்கள்; தெரிகிறது, நன்றாகவே ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள்.
 ஆனாலும், நம்மோடு ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். "நீங்கள் ஏன் இந்தி படிக்கவில்லை?' என்று நம்மைக் கேட்கிறார்கள். நம்மை எப்படியாவது இந்தி பயிலச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இச்செய்தி பட்டறிந்து உணர்ந்தது. நமக்கு (தமிழர்களுக்கு) ஏன் இந்தப் பற்று இல்லை?
 நம்முடைய காட்சி ஊடகங்களில் இசை, நாட்டியம், உரையாடல், நகைச்சுவை, சந்திப்பு, திரைப்படம் என்று எந்தப் பொருளில் நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் - வருணனையாளர் அவருடன் உரையாடும் விருந்தினர், நடுவர்கள், பங்கேற்பவர்கள் - இப்படி யாராக இருந்தாலும் தமிழில் பேசுகிறார்களா?
 தமிழில் தொடங்குவார்கள், பிறகு கடகடவென என்ன சொல்லுகிறார்கள் என்பதே நமக்குப் புரியாதவாறு ஆங்கிலத்தில் கொட்டி முழக்குகிறார்கள். பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பேசினால், ஏற்றுக்கொள்ளலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் அப்படிப் பேசும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
 நமது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழை வளர்க்க வேண்டும் என்று நாம் கோரவில்லை. தமிழைச் சிதைக்காதீர்கள் - இருப்பதையும் கெடுக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம்.
 "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே' "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே' என்றெல்லாம் கேட்ட நம் காதுகளில், "ஜாலிலோ ஜிம்கானா,டடடா டடடா டட்டாடா, மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு...' போன்ற பாடல்கள் தேளாய் வந்து கொட்டின.
 இப்போது கருநாகப் பாம்பே வந்து கடிக்கிறது.
 ""ஹீ ஈஸ் த ஹீரோ ஹீ ஈஸ் த ஹீரோ காக்கவந்த பார்ட்டி யாரோ?'' இது ஒரு தமிழ்ப்பாட்டின் தொடக்கம்.
 ஆத்திச்சூடி.. ஆத்திச்சூடி... யு.எ. ஆத்திச்சூடி.... என்று தொடங்கித் தமிழைக் கேவலப்படுத்தும் பலமொழிக் கலப்பு.
 "யூ வண்ட் டு சீல்மை கிஸ்
 பாய் யூ கான்ட் டச் திஸ்
 எவரிபடி ஹைப்நோடிக் ஹைப்நோடிக் சூப்பர் சானிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்''
 இப்படிப் போகிறது தமிழ்ப்பட பாட்டொன்று. சூழ்நிலைக்கேற்ப நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். பின்னர் ஏன் பாட்டைத் தமிழில் தொடர வேண்டும்?
 ""பூஜ்யம் என்னோடு
 பூவாசம் இன்றோடு
 மின்மினிகள் விண்ணோடு
 மின்னல்கள் கண்ணோடு''
 ஏனிந்தக் கலப்படம்? இங்கே ஒருசில சோறுகள் சிதறப்பட்டன. பானைச்சோறு அப்படியே இருக்கிறது. கொட்டிக் காட்ட இடமில்லை.
 திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் மானியம் கிட்டும் என்றார்கள். அதனால், ஆங்கிலத் தலைப்புகள் மாறித் தமிழில் பல வந்தன. அவற்றுள்ளும் பல கேலிக்கு இடமானவை. பொருளில்லாத ஓரெழுத்தில் ஒருபடத் தலைப்பு. ஏமாற்று வித்தைகளும், "அடாவடித் தலைப்புகளும் இடம்பெற்றன. நல்ல அழகிய படப்பெயர்களும் வந்தன.
 நம் தமிழ் ஏடுகள் - பத்திரிகைகள் பல அவற்றின் பெயரோடு ஆங்கில ஒட்டுச் சொற்களுடன் வெளிவருகின்றன. பெயர்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டாமலே நம் அன்பர்களுக்கு அவை எவை எனப் புரியும்.
 பத்திரிகை உள்ளே பல செய்திகள் ஆங்கிலத் தலைப்புகளில் வருகின்றன. அப்படி என்ன மயக்கம்? எல்லாம் "வணிக உத்திகள்' என்பார்கள்.
 ஃகாபி வித்...., இன்டர்வியூ, ஹிட்சாங்ஸ், ஓல்டு ஈஸ் கோல்டு, பீச் கேர்ள்ஸ், மியூசிக் மியூசிக், சூப்பர் சிங்கர், "ஹோம் ஹாப்பி ஹோம்' இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ தலைப்புகளில் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.
 இவை தவிர பிறமொழித் தொடர்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு, "கன்னா பின்னா' என்று தமிழில் வந்துகொண்டுள்ளன. யார் கேட்பது? யாரிடம் முறையிடுவது? "தமிழன் தமிழன்' என்று பேசுவது வீண்பேச்சு.
 தன் அன்னை ஊட்டி வளர்த்த மொழி - அமுதம் அனைய மொழியைச் சிதைத்தும் சிதைவதைக் கண்டும் வாளா இருக்கிறோமே! நாம் தமிழர் என்பதில் நமக்குப் பெருமை இருக்கிறதா?
 இப்படியெல்லாம் சிந்தித்தால் மொழி வெறி என்று தூற்றுவது முறையா? ஊர் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள். சுற்றி வந்தவர்களைக் கேளுங்கள். எங்கும் இத்தகைய கொடுமை உலக நாடுகளில் இல்லை. இல்லவே இல்லை.
 நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது. மொழி சித்திரவதை செய்யப்படுகிறது.
 காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தாலும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளது.
 காலத்தின் போக்கை அறியாமல் பழங்கதை பேசுகிறோம் என்று கருத வேண்டாம். எத்தனை காலம் மாறினாலும் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொழியும் பண்பாடும் சீரழிய நாம் அடைகிற வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியாகாது; அது வீக்கம், நோய்.
 "ஓகே ஓகே', "வெரி நைஸ்', "ஒண்டர்ஃபுல்', "சூப்பர்', "தாங்யூ', "ஃபென்டாஸ்டிக்', "ஷியூர் ஷியூர்' என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிட மாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன.
 உலகம் போகிறபோக்கில் நாமும் போக வேண்டும் என்பார்கள். செம்மறி ஆட்டுக் கூட்டமாய்ப் போக வேண்டுமா? சிந்தனையுள்ள மனிதனாக வாழ வேண்டுமா?

 நன்றி :தினமணி 

No comments:

Post a Comment