Saturday, 1 October 2011

திசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை?


நியூயார்க், செப். 24: பிரதமர் மன்மோகன் சிங்கின் ஐ.நா. சபை உரை பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகப் பல பிரச்னைகளிலும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் கருத்துகளை ஆதரித்து வந்த இந்திய அரசு, இப்போது புதிய அணுகுமுறையைக் கையாளத் தலைப்பட்டிருக்கிறதோ என்கிற சந்தேகத்தைப் பிரதமரின் ஐ.நா. சபை உரை ஏற்படுத்தியிருக்கிறது.
 ÷இதற்கு முன்னால், ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் ஐ.நா. சபையின் ஒத்துழைப்பில்லாமல் நேரடியாக அமெரிக்காவும், பிரிட்டனும் நடத்திய அத்துமீறல்களின்போது, வன்மையான எதிர்ப்பையோ கண்டனத்தையோ தெரிவிக்காத இந்தியா, இப்போது மறைமுகமாக அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எதிரான அணுகுமுறையை கையாள நினைக்கிறது என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்.
 ÷அவர்களுடைய விமர்சனத்துக்குக் காரணம் மூன்று முக்கியமான பிரச்னைகளில் அமெரிக்காவின் கருத்துகளிலிருந்து இந்தியா மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதைப் பிரதமரின் ஐ.நா. சபை பேச்சு வெளிப்படுத்தி இருப்பதுதான். உலகத்தில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பின்னடைவுக்குக் காரணமே அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் போன்ற நாடுகளில் நிலவும் பொருளாதாரப் பிரச்னைகள்தான் என்பதைப் பிரதமர் மன்மோகன் சிங் தனது உரையில் வெளிப்படையாகவே குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்கள் விமர்சகர்கள்.
 ÷""உலகமயமாக்கலும், சந்தைப் பொருளாதாரமும் உலக மக்களின் மேம்பாட்டுக்கு வழிகோலும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன்னால் நம்பிய உலகம், இப்போது அதன் எதிர்வினை விளைவுகளை எதிர்நோக்கத் தொடங்கி இருக்கிறது. உலகப் பொருளாதாரமே இப்போது தகரும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது'' என்கிற பிரதமர் மன்மோகன் சிங்கின் கூற்று, மறைமுகமாக வல்லரசு நாடுகளைக் குற்றம் சாட்டுவதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
 ÷அதேபோல, பாலஸ்தீனர்களின் பிரச்னையில், அமெரிக்கா பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. சபையில் இடம் கொடுப்பதால் எந்தவித பலனோ, மேற்கு ஆசியாவில் அமைதியோ ஏற்பட்டுவிடாது என்கிற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கிறது. ஆனால், பாலஸ்தீனத்துக்கு ஐ.நா. சபையில் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று இந்திய நிலையை சந்தேகத்துக்கு இடமின்றி இந்தியப் பிரதமர் தெளிவுபடுத்தி அமெரிக்கர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
 ÷""பாலஸ்தீனம் ஒரு சுதந்திர நாடாகக் கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்டு, இஸ்ரேலுடன் சமாதானமாக இயங்க வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஐ.நா. சபையின் உறுப்பினராக முழுத் தகுதியும் பெற்ற நாடாக பாலஸ்தீனம் விரைவில் வரவேற்கப்பட வேண்டும் என்று இந்தியா விழைகிறது'' என்று தனது உரையில் சந்தேகத்துக்கு இடமின்றி பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டிருப்பது, இந்தியா அமெரிக்காவுக்காகத் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை என்பதைக் காட்டுவதாக இந்தியத் தரப்பு துணிந்து கூறியும் வருகிறது.
 ÷எல்லாவற்றையும் விட, பிரதமரின் உரையிலேயே மிகவும் முக்கியமான அம்சமாக நியூயார்க்கிலுள்ள வெளிவிவகாரத் துறை நிபுணர்கள் கருதுவது, உள்நாட்டுப் பிரச்னைகளில் அந்நிய ராணுவத் தலையீடு பற்றிய பிரதமரின் கண்டனம்தான். ஏனைய உறுப்பினர் நாடுகள் எதுவும் தெளிவான கருத்துத் தெரிவிக்காத நிலையில், இந்தியா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி இருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
 ÷""எப்படி சட்டத்தின் ஆட்சி தேச நிர்வாகத்தில் நிலைநிறுத்தப்பட வேண்டுமோ, அதேபோல சர்வதேசப் பிரச்னைகளிலும் சட்டமும், நியாயமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். எந்தவொரு சமுதாயத்தையும் வெளியிலிருந்து அந்நியர்கள் தங்கள் ராணுவத்தின் உதவியுடன் முறைப்படுத்தவோ, நெறிப்படுத்தவோ முடியாது. உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக அந்நிய ராணுவம் முறைகேடாகத் தலையிடுவதும், பஞ்சாயத்து செய்வதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். மக்கள் தங்களது தலையெழுத்தை நிர்ணயித்துக் கொள்ள அனுமதிக்கப் பட வேண்டுமே தவிர, அவர்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அந்நிய நாடுகள் தீர்மானிக்க முடியாது. அப்படியே தலையீடு தேவைப்பட்டால், அது ஐ.நா. சபையின் தலைமையில் மட்டும்தான் நடைபெற வேண்டும்'' என்று பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பதைக் கேட்டு அமெரிக்கத் தரப்பு அதிர்ந்து போயிருப்பதாகத் தெரிகிறது.
 ÷மிகப் பெரிய பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து வரும் அமெரிக்கா, வளர்ந்து வரும் பொருளாதார சக்தியான இந்தியாவின் நட்பை இழந்துவிட விரும்பாது என்றும் சில விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் அணுகுமுறை மாற்றத்திற்கு என்ன காரணம் என்பதை அமெரிக்க வெளிவிவகாரத் துறை அலசத் தொடங்கி விட்டது என்றும் கூறப்படுகிறது.
 ÷லிபியாவில் அமெரிக்க ராணுவம் அத்துமீறி, அதிபர் மும்மார் கடாஃபிக்கு எதிரான போராளிகளை ஆதரித்து மக்கள் போராட்டத்தை ஏற்படுத்தியதுபோல, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் அத்தகைய அணுகுமுறையை அமெரிக்கா கையாண்டுவிடாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் இது என்று விளக்கமளிப்போரும் இருக்கிறார்கள்.
 ÷இந்தியாவில் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தபோது, அதற்கு ஆதரவாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்தது முதலே, மன்மோகன் சிங் அரசுக்கு அமெரிக்காவின் உள்நோக்கம் பற்றிய சந்தேகம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் ரஷ்யா, பிரேசில், பிரான்ஸ் போன்ற நாடுகளுடனான இந்திய உறவு பலப்பட்டிருப்பதும், அமெரிக்கப் பொருளாதாரம் நாளுக்கு நாள் பலவீனப்பட்டு வரும் நிலையில் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதும்கூட இந்தியாவின் அணுகுமுறை மாற்றத்திற்குக் காரணங்கள் என்கிறார்கள்.
 ÷இதைப்பற்றிக் கேட்டபோது, ""இந்தியா எப்போதுமே தனக்கென்று வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்து வருகிறது. ஒருபோதும் நாம் அமெரிக்கக் கொள்கைகளைக் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்ததே கிடையாது. கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும் இந்திய அமெரிக்க நல்லுறவு தொடர்ந்து வந்தது என்பதுதான் உண்மை. இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஏதோ இந்தியா தனது கொள்கையைக் கைவிட்டு அமெரிக்காவைச் சார்ந்த நேச நாடாக மாறிவிட்டது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவிட்டது. அது உண்மையல்ல. நமது வெளிவிவகாரக் கொள்கை எப்போதுமே தனித்தன்மை வாய்ந்ததாகத்தான் இருந்து வருகிறது'' என்று தேசியப் பாதுகாப்புச் செயலர் சிவசங்கர மேனன் தெரிவித்தார்.
 ÷ஐ.நா. சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருக்கும் இந்தியப் பிரதமர் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் தலைவர்கள் பலரைச் சந்திக்கவில்லை என்பதும், வழக்கத்துக்கு விரோதமாக துணிந்து வல்லரசு நாடுகளின் அணுகுமுறையை விமர்சித்திருக்கிறார் என்பதும், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி :தினமணி 

கூடங்குளமும் புகுஷிமாவும்

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் ஜப்பானில் விபத்துக்குள்ளாகிய புகுஷிமா அணுமின் நிலையத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கூடங்குளம் தமிழகத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. புகுஷிமாவும் அப்படித்தான். அது ஜப்பானின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.

 தமிழகத்தை 2004-ல் சுனாமி அலைகள் தாக்கின. புகுஷிமாவை இதேபோல கடந்த மார்ச் மாதம் சுனாமி தாக்கியது. ஆனால், ஒற்றுமைகள் இதோடு சரி, புகுஷிமாவில் உள்ள நிலைமைகள் வேறு. கூடங்குளத்தில் உள்ள நிலைமைகள் வேறு. ஆகவே, புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி கூடங்குளத்துக்கு ஏற்பட வாய்ப்பே கிடையாது. முக்கிய காரணம் பூகோள நிலைமைகள்.
 நிலப்பகுதியில் ஏற்படுவதைப்போலவே கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் ஏற்படுகின்றன. கடலடி பூகம்பங்கள் சில இடங்களில் மட்டுமே நிகழ்கின்றன. பூமியின் மேற்பரப்பானது பல சில்லுகளால் ஆனது. ஆங்கிலத்தில் இவற்றை "பிளேட்' என்கிறார்கள். உலகின் கண்டங்களும் கடல்களும் இந்தச் சில்லுகள் மீது தான் அமைந்துள்ளன. சில்லுகள் என்பவை பூமியின் மேற்பரப்புக்கு அடியில் அமைந்த பிரம்மாண்டமான பாறைப் பாளங்கள்.
 ஒரு சில்லு என்பது பல ஆயிரம் கிலோமீட்டர் நீள அகலம் கொண்டதாகவும், பல கிலோ மீட்டர் தடிமன் கொண்டதாகவும் இருக்கலாம். உதாரணமாக, இந்தியத் துணைக் கண்டமும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் இந்தியச் சில்லு மீது அமைந்துள்ளது. சில்லுகள் ஆண்டுக்குச் சில சென்டிமீட்டர் வேகத்தில் நகருகின்றன. இந்தியச் சில்லு வடகிழக்குத் திசையை நோக்கி நகர்ந்து ஐரோப்பாவும் ரஷியாவும் மத்திய ஆசிய நாடுகளும் அமைந்த யூரேசிய சில்லுவை நெருக்குகிறது.
 அண்மையில் சிக்கிமில் ஏற்பட்ட பூகம்பத்துக்கு இதுவே காரணம். ஒரு சில்லு இன்னொன்றை நெருக்காமல் அதை உரசிச்செல்வது உண்டு. வேறு இடங்களில் ஒரு சில்லு இன்னொரு சில்லுக்கு அடியில் புதையுண்டு போவதும் உண்டு. பூமியின் மேற்பரப்பில் பிரதானமாக ஏழு பெரிய சில்லுகளும் மற்றும் பல சிறிய சில்லுகளும் உள்ளன. இந்தச் சில்லுகள் சந்திக்கும் இடங்களில்தான் பிரச்னைகள் தோன்றுகின்றன.
 இந்தியா அமைந்த சில்லுவின் கிழக்குப் பகுதியானது வங்கக் கடலுக்கு அடியில் பர்மா சில்லுக்கு அடியில் புதைகிறது. இப்படி நிகழும்போது கடலடியில் கடும் பூகம்பம் ஏற்படும். 2004-ல் இப்படி நிகழ்ந்தபோதுதான் சுனாமி தோன்றி தமிழகத்தைத் தாக்கியது. மிகக் கடுமையான கடலடி பூகம்பங்களே சுனாமியை உண்டாக்குகின்றன. சுனாமியைத் தோற்றுவிக்கக்கூடிய கடலடி மடு தமிழகக் கரையிலிருந்து குறைந்தது 1,500 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ளது. 2004-ல் சுனாமி தோன்றியதற்குக் காரணமான கடலடி பூகம்பம் தமிழகக் கரையிலிருந்து சுமார் 1,860 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.
 தமிழகத்துடன் ஒப்பிட்டால், ஜப்பானைச் சுற்றி பசிபிக் சில்லு, யூரேசிய சில்லு, வட அமெரிக்க சில்லு, பிலிப்பின்ஸ் சில்லு எனப் பல சிறிய சில்லுகள் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகளின் சந்திப்புகள் ஜப்பானின் கரைகளுக்கு மிக அருகில் உள்ளன. ஜப்பானில் ஓயாது பூகம்பங்கள் நிகழ்வதற்குக் காரணம், இந்தச் சில்லுகளின் நகர்வுகளே.
 ஜப்பானின் கிழக்குப் பகுதியில் சில்லுகள் ஒன்றுக்கு அடியில் இன்னொன்று புதைவதும் நிகழ்ந்து வருகிறது. இவை கடலடி பூகம்பங்களை உண்டாக்கும்போது சுனாமிகள் தோன்றுகின்றன. ஜப்பானில் சுனாமி தாக்குதல் என்பது சகஜம். சுனாமி என்பதே ஜப்பானியச் சொல்லாகும். ஜப்பானில், பூகம்ப எச்சரிக்கை நிலையங்களும், சுனாமி எச்சரிக்கை நிலையங்களும் நிறையவே உள்ளன. ஆனால், எச்சரிக்கை விடப்பட்ட பின் உஷார் ஆவதற்குப் போதுமான அவகாசம் இருந்தால்தான் எச்சரிக்கைக்கு அர்த்தம் உண்டு.
 இந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி புகுஷிமாவைத் தாக்கிய பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 9-ஆக இருந்தது. உடனே பூகம்ப எச்சரிக்கையும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டன. ஆனால், சுனாமிக்குக் காரணமான கடலடி பூகம்பம் புகுஷிமாவிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சுனாமி அலைகள் மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் செல்பவை. ஆகவே, சுனாமியிலிருந்து தப்ப, போதுமான அவகாசம் கிடைக்கவில்லை.
 இத்துடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் கரை ஓரமாகக் கடலடியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. கடலடி பூகம்பம் ஏற்படக்கூடிய, அதாவது சுனாமி தோன்றக்கூடிய பகுதி என்பது தமிழகத்திலிருந்து குறைந்தது 1,800 கிலோமீட்டரில் உள்ளது. ஆகவே, அப் பகுதியில் எதிர்காலத்தில் என்றாவது ஒருநாள் பெரிய சுனாமி தோன்றியது என்றால் தமிழகக் கரை ஓரமாக உள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் குறைந்தது மூன்றரை மணி நேரம் அவகாசம் கிடைக்கும்.
 2004-ம் ஆண்டுக்கு முன்னர் வங்கக் கடல் பகுதியில் சுனாமியைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்ய எந்த ஏற்பாடும் இல்லாதிருந்தது. அவ்வித ஏற்பாடு இல்லாமல் இருந்த நிலையிலும், தமிழகத்தின் கரை ஓரமாக அமைந்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இப்போது சுனாமி எச்சரிக்கை நிலையங்கள் உள்ளதால் சுனாமி தாக்குதல் ஏற்படும் என்றால் கல்பாக்கத்திலும் சரி, கூடங்குளத்திலும் சரி முன்கூட்டி தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள நிறைய அவகாசம் கிடைக்கும்.
 எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் முக்கியமான பகுதி அணு உலையாகும். யுரேனியம் அடங்கிய உலோகத் தண்டுகள் கட்டுக்கட்டாக அணு உலைக்குள் வைக்கப்பட்டிருக்கும். யுரேனியம் அடங்கிய தண்டுகளை அருகருகே வைத்த மாத்திரத்தில் சில நூறு சென்டிகிரேட் அளவுக்குப் பயங்கர வெப்பம் தோன்றும். யுரேனியத்தின் விசேஷத்தன்மை இதற்குக் காரணம். இத் தண்டுகளை அப்படியேவிட்டால் உருகும், ஆவியாகும், காற்றில் கலந்து சுற்று வட்டாரத்தில் கதிர்வீச்சு ஆபத்தை ஏற்படுத்தும்.
 ஆகவே, அணுஉலை எப்போதும் தண்ணீருக்குள் இருக்க வேண்டும். ஒருபுறத்திலிருந்து குளிர்ந்த நீர் வந்து கொண்டிருக்கும். மறுபுறம் அந்த நீர் பயங்கரமாகச் சூடேறி நீராவியாகி வெளியே சென்று கொண்டிருக்கும். இவ்விதமாகத் தோன்றும் நீராவியைக்கொண்டு ஜெனரேட்டரை இயக்கி மின்சாரத்தை உற்பத்தி செய்கிறார்கள்.
 பூகம்பம் ஏற்பட்டால் அணுமின் நிலையம் பாதிக்கப்படலாகாது என்பதற்காக, எல்லா அணுமின் நிலையங்களிலும் அணுமின் நிலையம் தானாகவே செயல்படாது நின்றுவிடும். ஆகவே, மின்சார உற்பத்தி அடியோடு நின்றுவிடும். அப்படியானால் அணு உலை என்னாவது? அதற்குத் தொடர்ந்து நீர் கிடைககாவிட்டால் ஆபத்தாயிற்றே. ஆகவே, எல்லா அணுமின் நிலையங்களிலும் டீசலால் இயங்கும் ஜெனரேட்டர்களை வைத்திருப்பர். அணு உலைக்கு நீரை அளிப்பதற்கான பம்புகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை டீசல் ஜெனரேட்டர்கள் அளிக்கும்.
 புகுஷிமா அணுமின் நிலையத்தைச் சுனாமி தாக்கியபோது டீசல் ஜெனரேட்டர்கள் கடல் நீரில் மூழ்கிப்போயின. அவை கடலோரமாகத் தாழ்வான இடத்தில் வைக்கப்பட்டிருந்ததே காரணம். இவை மட்டும் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தால் புகுஷிமாவில் எந்த விபத்தும் ஏற்பட்டிராது. கல்பாக்கத்தில் டீசல் ஜெனரேட்டர்கள் உயரமான இடத்தில் இருந்ததால் 2004-ல் சுனாமி தாக்கியபோது பிரச்னை ஏற்படவில்லை. இப்போதெல்லாம் அணுமின் நிலையங்களில் நீரை அளிக்கும் பம்புகளை இயக்குவதற்குக் கூடுதல் ஏற்பாடாக பெரிய மின்சார பாட்டரிகளையும் வைத்திருக்கின்றனர்.
 டீசல் ஜெனரேட்டர் செயலிழந்தால் பாட்டரிகளைப் பயன்படுத்துவர். புகுஷிமாவில் இப்படியான நவீன ஏற்பாடுகள் இல்லாததற்கு அது கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது என்பதேயாகும். தவிர, சில ஆண்டுகளில் புகுஷிமா அணுமின் நிலையத்தை மூடிவிடத் திட்டமிட்டிருந்தனர்.
 ஆகவே, அங்கு நவீன ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சுருங்கச்சொன்னால் புகுஷிமாவில் விபத்து ஏற்பட்டதற்கு டீசல் ஜெனரேட்டர்கள் இயங்காமல் போனதே காரணம்.
 உலகில் இப்போது 30 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் உள்ளன. புகுஷிமா விபத்துக்குப் பிறகும் இவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. எனினும், புகுஷிமா விபத்துக்குப் பிறகு பொதுவில் மக்களிடையே அணுமின் நிலையங்கள் பற்றி ஒரு பயம் தோன்றியுள்ளது.
 எங்கோ ஒரு ரயில் விபத்தில் 100 பேர் மடிந்ததாகச் செய்தியைப் படிக்கின்ற ஒருவர், மறுநாள் காலையில் ரயிலில் ஏறும்போது அவர் மனதில் ஓர் அச்சம் நிலவும். இது இயல்பு. கூடங்குளம் பற்றிய அச்சமும் கிட்டத்தட்ட இது போன்றதே. எனினும் ரயில் விபத்தையும் அணுமின் நிலைய விபத்தையும் ஒப்பிட முடியாதுதான்.
 எல்லாம் சரி, அணுமின் நிலையங்களுக்கு மாற்று உள்ளதா? நிலக்கரியைப் பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களை அமைப்பது தலைவலிபோய் திருகுவலி என்பதற்கு ஒப்பானது. காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலைகள் மூலம் ஆண்டில் சில மாதங்களுக்கு மட்டுமே மின்சாரம் கிடைக்கும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற இயலும். ஆனால், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ. 25 வீதம் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும். எரிவாயு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.
 தமிழகத்தில் போதுமான எரிவாயு கிடைக்கவில்லை. ஆந்திர மாநிலத்தின் கரை ஓரமாகக் கடலுக்கு அடியில் ஏராளமான அளவில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராட்சதக் குழாய்கள் மூலம் இதைத் தமிழகத்துக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுமானால் எரிவாயுவைப் பயன்படுத்தும் மின் நிலையங்களை அமைக்க முடியும்.
 ஏற்கெனவே நிறுவப்பட்டுத் தயார்நிலையில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை என்ன செய்வது? அது பாதுகாப்பானதுதான் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்வரையில் காத்திருப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது.
நன்றி :தினமணி 

முறையாகுமா இந்த மொழிக்கலப்பு?

வேளாண்மையில் கலப்புமுறை விளைச்சல் என்பது வரவேற்கத்தக்கதாகலாம். கலப்புத் திருமணங்களும் பாராட்டத்தக்கவையே.

 ஆனால், மொழிக்கலப்பு அத்தகையதாகாது. தமிழில் பிறமொழிக் கலப்பு, காலம்காலமாக நடந்து வருவதுதான். ஆனால், இப்போது தமிழில் ஆங்கிலம் கலப்பதுபோல் இவ்வளவு கேவலமாக முன்னெப்போதும் நடந்ததில்லை.
 ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம்; படித்தவர்க்கு அடையாளம் என்றே இப்போதும் பலர் கருதுகிறார்கள்.
 பாதித்தமிழ் மீதி ஆங்கிலம், ஆங்கிலத்தில் தொடங்கித் தமிழில் முடிப்பது, தமிழில் தொடங்கி இடைஇடையே ஆங்கிலச் சொற்களைக் கலப்பது என்று பல போக்கில் தமிழர்கள் பேசி வருகிறார்கள்.
 சோறு என்று சொல்லவும் தமிழன் வெட்கப்படுகிறான். தயிர்ச்சோற்றை "கர்டு ரைஸ்' என்பான்; இன்னும் லைம் ரைஸ், ஒயிட் ரைஸ் இப்படியே நீளும்.
 பள்ளிப் பிள்ளைகள் வீட்டிலிருந்து புறப்படும்போது "அம்மா போயிட்டு வர்றேன்' என்று சொல்லுவதைப் பெற்றோரே இழிவாகக் கருதுகிறார்கள். "மம்மி பை பை', "டாடி பை பை' என்று சொல்லப் பழக்கிவிடுகிறார்கள்.
 மதிய உணவு என்பதைக்கூட "லஞ்ச்' என்று சொல்லக் கட்டாயப்படுத்துகிறார்கள். யாரும் இப்போது வீட்டிலிருந்து விடைபெறும்போது "போய் வருகிறேன்' "என்ன வரட்டுமா?' என்று சொல்லுவதில்லை. எல்லோரும் "டாட்டா, பைபை'தான்.
 "ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே அறிவு வளரும்' என்ற புதிய மூடநம்பிக்கை நாட்டில் பரவிக் கிடக்கிறது. அதனால் ஆங்கில வழிப் பள்ளிகளில் சேர்த்து விடுவதோடு, வீட்டிலும் ஆங்கிலம் பேசு எனப் பிள்ளைகளை ஊக்கப்படுத்துகிறார்கள்.
 தமிழ்வழிப் பள்ளிகளில் படித்தவர்கள் தாம் நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்றவர் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
 வடக்கே வாழ்பவர்கள், நாம் அவர்களைச் சந்திக்கும்போது நமக்கு இந்தி தெரியாது என்று தெரிந்தும் நம்மோடு இந்தியில்தான் பேசுகிறார்கள்.
 நாம் உடனே, "இந்தி மாலும் நகி' என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறோம்.
 அப்போதும் அவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்து விடாதீர்கள்; தெரிகிறது, நன்றாகவே ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள்.
 ஆனாலும், நம்மோடு ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். "நீங்கள் ஏன் இந்தி படிக்கவில்லை?' என்று நம்மைக் கேட்கிறார்கள். நம்மை எப்படியாவது இந்தி பயிலச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இச்செய்தி பட்டறிந்து உணர்ந்தது. நமக்கு (தமிழர்களுக்கு) ஏன் இந்தப் பற்று இல்லை?
 நம்முடைய காட்சி ஊடகங்களில் இசை, நாட்டியம், உரையாடல், நகைச்சுவை, சந்திப்பு, திரைப்படம் என்று எந்தப் பொருளில் நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சித் தொகுப்பாளர் - வருணனையாளர் அவருடன் உரையாடும் விருந்தினர், நடுவர்கள், பங்கேற்பவர்கள் - இப்படி யாராக இருந்தாலும் தமிழில் பேசுகிறார்களா?
 தமிழில் தொடங்குவார்கள், பிறகு கடகடவென என்ன சொல்லுகிறார்கள் என்பதே நமக்குப் புரியாதவாறு ஆங்கிலத்தில் கொட்டி முழக்குகிறார்கள். பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பேசினால், ஏற்றுக்கொள்ளலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவரும் அப்படிப் பேசும்போது எரிச்சல் ஏற்படுகிறது.
 நமது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழை வளர்க்க வேண்டும் என்று நாம் கோரவில்லை. தமிழைச் சிதைக்காதீர்கள் - இருப்பதையும் கெடுக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம்.
 "நதியில் விளையாடிக் கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே' "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினில் இருக்கையிலே' என்றெல்லாம் கேட்ட நம் காதுகளில், "ஜாலிலோ ஜிம்கானா,டடடா டடடா டட்டாடா, மேலே பறக்கும் ராக்கெட்டு மின்னல் பூச்சி ஜாக்கெட்டு...' போன்ற பாடல்கள் தேளாய் வந்து கொட்டின.
 இப்போது கருநாகப் பாம்பே வந்து கடிக்கிறது.
 ""ஹீ ஈஸ் த ஹீரோ ஹீ ஈஸ் த ஹீரோ காக்கவந்த பார்ட்டி யாரோ?'' இது ஒரு தமிழ்ப்பாட்டின் தொடக்கம்.
 ஆத்திச்சூடி.. ஆத்திச்சூடி... யு.எ. ஆத்திச்சூடி.... என்று தொடங்கித் தமிழைக் கேவலப்படுத்தும் பலமொழிக் கலப்பு.
 "யூ வண்ட் டு சீல்மை கிஸ்
 பாய் யூ கான்ட் டச் திஸ்
 எவரிபடி ஹைப்நோடிக் ஹைப்நோடிக் சூப்பர் சானிக் சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்''
 இப்படிப் போகிறது தமிழ்ப்பட பாட்டொன்று. சூழ்நிலைக்கேற்ப நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். பின்னர் ஏன் பாட்டைத் தமிழில் தொடர வேண்டும்?
 ""பூஜ்யம் என்னோடு
 பூவாசம் இன்றோடு
 மின்மினிகள் விண்ணோடு
 மின்னல்கள் கண்ணோடு''
 ஏனிந்தக் கலப்படம்? இங்கே ஒருசில சோறுகள் சிதறப்பட்டன. பானைச்சோறு அப்படியே இருக்கிறது. கொட்டிக் காட்ட இடமில்லை.
 திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் மானியம் கிட்டும் என்றார்கள். அதனால், ஆங்கிலத் தலைப்புகள் மாறித் தமிழில் பல வந்தன. அவற்றுள்ளும் பல கேலிக்கு இடமானவை. பொருளில்லாத ஓரெழுத்தில் ஒருபடத் தலைப்பு. ஏமாற்று வித்தைகளும், "அடாவடித் தலைப்புகளும் இடம்பெற்றன. நல்ல அழகிய படப்பெயர்களும் வந்தன.
 நம் தமிழ் ஏடுகள் - பத்திரிகைகள் பல அவற்றின் பெயரோடு ஆங்கில ஒட்டுச் சொற்களுடன் வெளிவருகின்றன. பெயர்களை நாம் வெளிச்சம் போட்டுக் காட்டாமலே நம் அன்பர்களுக்கு அவை எவை எனப் புரியும்.
 பத்திரிகை உள்ளே பல செய்திகள் ஆங்கிலத் தலைப்புகளில் வருகின்றன. அப்படி என்ன மயக்கம்? எல்லாம் "வணிக உத்திகள்' என்பார்கள்.
 ஃகாபி வித்...., இன்டர்வியூ, ஹிட்சாங்ஸ், ஓல்டு ஈஸ் கோல்டு, பீச் கேர்ள்ஸ், மியூசிக் மியூசிக், சூப்பர் சிங்கர், "ஹோம் ஹாப்பி ஹோம்' இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ தலைப்புகளில் நம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்.
 இவை தவிர பிறமொழித் தொடர்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு, "கன்னா பின்னா' என்று தமிழில் வந்துகொண்டுள்ளன. யார் கேட்பது? யாரிடம் முறையிடுவது? "தமிழன் தமிழன்' என்று பேசுவது வீண்பேச்சு.
 தன் அன்னை ஊட்டி வளர்த்த மொழி - அமுதம் அனைய மொழியைச் சிதைத்தும் சிதைவதைக் கண்டும் வாளா இருக்கிறோமே! நாம் தமிழர் என்பதில் நமக்குப் பெருமை இருக்கிறதா?
 இப்படியெல்லாம் சிந்தித்தால் மொழி வெறி என்று தூற்றுவது முறையா? ஊர் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள். சுற்றி வந்தவர்களைக் கேளுங்கள். எங்கும் இத்தகைய கொடுமை உலக நாடுகளில் இல்லை. இல்லவே இல்லை.
 நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது. மொழி சித்திரவதை செய்யப்படுகிறது.
 காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தாலும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளது.
 காலத்தின் போக்கை அறியாமல் பழங்கதை பேசுகிறோம் என்று கருத வேண்டாம். எத்தனை காலம் மாறினாலும் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொழியும் பண்பாடும் சீரழிய நாம் அடைகிற வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியாகாது; அது வீக்கம், நோய்.
 "ஓகே ஓகே', "வெரி நைஸ்', "ஒண்டர்ஃபுல்', "சூப்பர்', "தாங்யூ', "ஃபென்டாஸ்டிக்', "ஷியூர் ஷியூர்' என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிட மாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன.
 உலகம் போகிறபோக்கில் நாமும் போக வேண்டும் என்பார்கள். செம்மறி ஆட்டுக் கூட்டமாய்ப் போக வேண்டுமா? சிந்தனையுள்ள மனிதனாக வாழ வேண்டுமா?

 நன்றி :தினமணி 

மக்கள் சக்தியின் மகத்தான வெற்றி!

ரஷிய நாட்டின் உதவியோடு கூடங்குளத்தில் நிறுவப்பட்டிருக்கும் அணுமின் நிலையம் திடீரென்று அங்கு வந்துவிடவில்லை. ஆந்திர மாநிலத்தில் நாகார்ஜுன சாகரிலும், கர்நாடக மாநிலத்தில் கைக்காவிலும் கேரளத்தில் பூதகான்கெட்டு என்ற இடத்திலும் தொடங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டு இருந்த அணுமின் நிலையங்கள் அந்தந்த மாநில மக்களின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டன.

 ஆனால், 1992-ம் ஆண்டு தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு கூடியபோது கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைப்பது என்றும் உற்பத்தியாகும் மின்சாரத்தைத் தங்களுக்குள் பங்குபோட்டுக் கொள்வது என்றும் தென்மாநில முதலமைச்சர்கள் மாநாடு முடிவு செய்தது.
 இத்திட்டத்துக்கு இசைவளித்ததன் மூலம் தமிழக மக்களை அணு அபாயத்துக்கு உள்ளாக்கிய தவற்றினை தமிழக அரசு செய்துவிட்டது. தொடர்ந்து பதவியிலிருந்த தமிழக அரசுகள் எதுவும் இத்திட்டத்துக்கு எதிராக எதுவும் கூறவில்லை, செய்யவில்லை.
 தங்கள் மாநிலங்களில் மக்கள் எதிர்ப்புக்கு அடிபணிந்து அணு உலைத் திட்டங்களைக் கைவிட்ட, ஆந்திர, கர்நாடக, கேரள அரசுகள் தமிழ்நாட்டில் அணு உலைகள் நிறுவுவதில் அக்கறை காட்டி ஓரளவு நிதியுதவி செய்யவும் முன்வந்தது தங்களது சுயநலத்துக்காக என்பதைத் தமிழக அரசு அன்று உணரவில்லை.
 அணு உலை அபாயம் ஏற்பட்டால் அதிலிருந்து தங்கள் மாநில மக்களைக் காப்பாற்றிக் கொள்வதோடு தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். இம் மாநிலங்களின் சதித்திட்டங்களின் பின்னணியைப் புரிந்து கொள்ள முடியாமல், இந்திய அரசின் நெருக்குதலுக்கு உள்பட்டு இதற்கு இணங்கியது தமிழக அரசின் தவறாகும். இந்தியாவில் இயங்கி வரும் அணு மின் உலைகள் வெற்றிகரமாகச் செயல்படவில்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுவிட்ட உண்மையாகும்.
 உலகம் முழுவதும் பயன்படும் மின்சக்தியில் அணுசக்தி மூலம் கிடைப்பது 4 விழுக்காடுதான். இதற்கென அரசுகள் பெரிய அளவுக்கு உதவி செய்தாலும் கடந்த 15 ஆண்டுகளாக இந்த 4 விழுக்காட்டில் முன்னேற்றம் இல்லை. பயன்பாடு இவ்வளவு சிறிதாக இருக்கும்போது இந்த நச்சரவத்தை மடியில் போட்டுக்கொள்ளத் துடிப்பது ஏன்?
 உலைகளைக் குளிர்விக்கும் கதிர்வீச்சுக் கலந்த தண்ணீரையும் உப்பு அகற்றும் ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு மற்றும் ரசாயனங்களையும் கடலில் கொட்டி ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கும் முயற்சியே இதுவாகும். கடல் வாழ் உயிரினங்களை நம்பி வாழ்கிற மீனவர்களின் கதி என்ன?
 கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் தொடங்கினால் அதைச் சுற்றி 3 கிலோ மீட்டர் தொலைவு வரை அமைந்துள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சொந்த வீடுகளிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் வெளியேற நேரிடும்.
 இதைத் தவிர, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உவரியிலிருந்து குமரி மாவட்டத்தில் உள்ள முட்டம் வரையில் உள்ள சுமார் 75 கிலோ மீட்டர் கடற்கரைப் பகுதி நெடுகிலும் வாழும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள்.
 அணு சக்தி நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கதிர்வீச்சால் கடற்கரையும் கடலும் பாதிக்கப்படும்போது அங்கு வாழும் உயிரினங்களும், பெரும் பாதிப்புக்குள்ளாகும். 3 லட்சத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் தங்கள் பிழைப்பை இழப்பதுடன் வாழையடிவாழையாக வாழ்ந்த தங்கள் கிராமங்களிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும்.
 கூடங்குளத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பேச்சிப்பாறை அணையிலிருந்து அணுமின் நிலையத்துக்குத் தேவையான தண்ணீர் கொண்டு போகப்படும். கிணற்றுப் பாசனவசதி அதிகமில்லாத குமரி மாவட்ட மக்கள் விவசாயத்துக்கு பேச்சிப்பாறை - பெருஞ்சாணி அணைகளின் நீரைத்தான் நம்பியிருக்கிறார்கள். இந்தத் திட்டம் அமலுக்கு வந்தால் இந்த நிலங்கள் போதுமான நீர்வளமில்லாமல் வறண்டு போகும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்.
 கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ. சுற்றளவுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் அவர்களை முழுவதுமாக வெளியேற்றுவதோ, பாதுகாப்பான வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ அவர்களுக்குத் தேவையான இருப்பிட வசதிகளைச் செய்வதோ, மருத்துவம், கல்வி வசதிகள் அமைத்துத் தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ எந்த அரசாலும் செய்யமுடியாத காரியமாகும்.
 கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து கிடைக்கும் அணுக்கழிவிலிருந்து அணு ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவும் புளுட்டோனியம் எடுக்கப்படுகிறது. எனவே, இந்த அணுக்கழிவு மிக முக்கியமானது.
 கல்பாக்கம், தாராப்பூர் ஆகிய இரு அணு மின் நிலையங்களில் மட்டும் ஆண்டுக்கு தலா 1,000 கிலோ புளுட்டோனியம் உற்பத்தியாகிறது. 3 தேக்கரண்டி புளுட்டோனியம் மூலம் 900 கோடி பேருக்குப் புற்றுநோயை ஏற்படுத்த முடியும் என்ற நிலையில் மேலும் மேலும் சேரும் புளுட்டோனியத்தை என்ன செய்வது? புளுட்டோனியத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் வேக அணு ஈனுலைக்கான எரிபொருள் சாதாரண யுரேனியத்தைவிட 5 முதல் 10 மடங்கு விலை அதிகமாகும்.
 அணு உலைக் கழிவு ஒரு பெரிய பிரச்னையாகும். கூடங்குளம் அணுமின் நிலையக் கழிவு ரஷியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர், அது இந்தியாவிலேயே மறுசுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. கூடங்குளம் அணுஉலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தைப் பயன்படுத்தும்.
 ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும்போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்தக் கொடிய நச்சை, 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு நாம் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளைத் தேக்கி வைத்திருப்பதாலும், மறுசுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும் காற்றும் பாதிக்கப்படும்.
 நமது விளைநிலங்களும் பயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படும். அவற்றிலிருந்து பெறப்படுகிற பால், பழங்கள், காய்கறிகள் நச்சு உணவுகளாக மாறும். கதிர்வீச்சுக் கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் மீன்வளம் பெரிதும் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும் வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். அணு உலையின் புகைப்போக்கிகளிலிருந்து வெளிவரும் நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின், சிசிஎம், ஐசோடோப்புகள் போன்ற கதிர்வீச்சு நிறைந்த பொருள்கள் நமது உணவில், குடிநீரில், சுவாசத்தில், வேர்வையில் கலந்து மக்கள் வதைக்கப்படுவார்கள். நமது குழந்தைகளும், பேரக்குழந்தைகளும்கூட நீண்ட காலத்துக்குப் பாதிக்கப்படுவார்கள்.
 கூடங்குளம் அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் என்ன நேரும் என்பது பற்றி டாக்டர் சிவாஜிராவ் என்ற அணு விஞ்ஞானி வெளியிட்ட கருத்துகளின் அடிப்படையில் 21-4-90 தேதியிட்ட "தினமணி' நாளிதழ் தனது தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது.
 ""கூடங்குளம் அணுமின் உலை வெடித்தால் 140 கிலோமீட்டர் தொலைவு வரை வசிக்கும் பல லட்சக்கணக்கான மக்களுக்கும் கால்நடைகளுக்கும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகளுக்கும் 20 ஆண்டுகள் வரை ஏற்படக்கூடிய பேரிழப்புகளை இங்கிலாந்து நாட்டு சைஸ்வெல் அறிக்கையிலிருந்து ஒருவாறு நாம் ஊகித்து உணரலாம்.
 விபத்து நடந்த இடத்திலிருந்து 140 கி.மீ. தொலைவு வரை வசிப்பவர்களை வெளியேற்ற வேண்டியிருக்கும். விபத்துக்குப் பிறகு 77 கி.மீ. வரை 20 ஆண்டுகளுக்கும் 115 கிலோமீட்டர் வரை 5 ஆண்டுகளுக்கும் 140 கி.மீ. வரை ஓராண்டு காலத்துக்கும் அங்கு வசித்த மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பவே முடியாது.
 திருநெல்வேலியும் மற்றும் பல மக்கள் நெருக்கமாக வாழும் ஊர்களும் கூடங்குளத்திலிருந்து 77 கி.மீ. தொலைவுக்குள் இருக்கின்றன. தூத்துக்குடியும் மற்றும் பல ஊர்களும் 115 கி.மீ. தொலைவுக்கும், சாத்தூர் போன்ற பல ஊர்கள் 140 கி.மீ. தொலைவுக்குள்ளும் அமைந்துள்ளன.
 கேரளத்தில் இருக்கும் திருவனந்தபுரம், கொல்லத்தின் புறநகர்ப் பகுதிகள் உள்ளிட்ட பெரிய ஊர்கள் 140 கி.மீ. அபாய எல்லைக்குள் அடங்கியுள்ளன. கூடங்குளத்தில் அணு உலை வெடித்தால் மேற்கண்ட நகரங்களும், கிராமங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.
 எல்லா வகையிலும் பாதுகாப்பு வாய்ந்த அணு உலை அமைக்கப்படுகிறது என்றே வைத்துக்கொண்டாலும், அவற்றிலிருந்து வெளியேறும் அணுக்கழிவை அகற்றுவது என்பது மிகப்பெரிய பிரச்னையாகும். இதற்கான பாதுகாப்பான முறையை இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவேயில்லை. அணு உலை ஒன்றின் ஆயுள்காலம் சுமார் 25 ஆண்டுகாலம் மட்டுமே. இதைக் கட்டி முடிக்க 15 ஆண்டுகள் ஆகும். அணு உலையில் உள்ள எரிபொருளைப் பத்திரமாகப் பிரித்தெடுக்க 5 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு தொலைவில் இருந்து இயங்கும் கருவிகள் ரோபாட்டுகள் ஆகியவற்றின் மூலம் அணு உலையைப் பிரிப்பதற்கு 10 - 15 ஆண்டுகள் ஆகும்.
 அணு உலையைப் பிரிப்பதற்குப் பதில், பெரும் பொருள்செலவில் அணுஉலைக்கு காங்கிரீட்டினால் ஆன சமாதியைக் கட்டலாம் என்றும் ஒரு யோசனை கூறப்படுகிறது. அப்படியே கட்டினாலும் இதற்குள் உள்ள கதிரியக்கம் தணிவதற்கு 130 ஆண்டுகள் ஆகும். அதற்குப் பின்தான் அதைப் பிரிப்பது பாதுகாப்பாக இருக்கும் என்று விஞ்ஞானிகளே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.''
 இந்தியாவில் உள்ள அணு உலைகளில் குவிந்துவரும் அணுக்கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை நம்முடைய அணு விஞ்ஞானிகள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும். நமது நாட்டைவிட எத்தனையோ மடங்கு விஞ்ஞானமும், தொழில் வளர்ச்சியும் அடைந்த ஜெர்மனி 2022-ம் ஆண்டுக்குள் அனைத்து அணுஉலைகளையும் மூடிவிட முடிவெடுத்துள்ளது.
 இத்தாலியில் அண்மையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 90 சதவீதம் மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிட்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகளும் அணுஉலைகளை மூடிவிட முடிவெடுத்திருக்கின்றன.
 புகுஷிமா விபத்து நடந்த ஜப்பான் நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் 10 அணு உலைகளின் வேலைகளை அப்படியே நிறுத்திவிட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்.
 கூடங்குளத்தில் அமையவிருக்கும் அணுமின் நிலையத் திட்டம் தங்களின் கொலைக்களமாக ஆகிவிடுமோ என்ற அச்சமும் கவலையும் தென் மாவட்டங்களில் வாழும் மக்களை ஆட்டிப்படைத்ததன் விளைவாகத்தான் அவர்கள் போராடினார்கள்.
 உண்ணாவிரதம் இருந்த மக்களின் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்துப் பேசியபோது, அவர்கள் கோரிக்கையை ஏற்று இப் பிரச்னை குறித்துத் தமிழக முதல்வர், அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அதன் விளைவாக, உண்ணாவிரதப் போராட்டத்தை போராட்டக் குழுவினர் கைவிட்டனர்.
 மக்களின் போராட்டம் எவ்வளவு வலிமையானது என்பதை கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பான போராட்டம் நிரூபித்துள்ளது. தாங்கள் அணுஉலையால் பெரும் பாதிப்புக்குள்ளாவோம் என அஞ்சிய விவசாயிகளும், மீனவர்களும் ஒன்றுதிரண்டு இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். எந்த அரசியல் கட்சியும் அவர்களைத் தூண்டிவிடவில்லை. தொண்டு நிறுவனங்களும், கிறிஸ்தவ நிறுவனங்களும் இந்தப் போராட்டத்துக்குப் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு அர்த்தமில்லாதது.
 மக்களின் மகத்தான எழுச்சியிலிருந்து யாரும் விலகி நிற்க முடியாது. கூடங்குளம் மக்களின் ஒன்றுபட்ட போராட்டம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், ஊழல்கள் ஆகியவற்றுக்கு எதிராக அந்தந்தப் பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு போராடுவார்களேயானால், அந்தப் போராட்டத்தை முறியடிக்கும் வலிமை எந்த அரசுக்கும் இருக்க முடியாது. ஜனநாயகத்தில் மக்களே இறுதித் தீர்ப்பை வழங்குபவர்கள் என்பதை ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு இந்தப் போராட்டம் உணர்த்தியிருக்கிறது.
 நன்றி:தினமணி...