இந்தியாவின் தேசிய கிரிக்கெட் அணியைத் தேர்வு செய்வதற்கு பிசிசிஐ என்கிற தனியார் அமைப்புக்கு என்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி அண்மையில் பரபரப்பை எழுப்பியது. இந்தக் கேள்வியைக் கேட்டவர் வேறு யாருமில்லை, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர்தான். இது ஏதோ விவரம் தெரியாமல் கேட்கப்பட்ட கேள்விபோலத் தோன்றினாலும், இந்திய விளையாட்டுத் துறையின் பல்வேறு அம்சங்களை மறுபரிசீலனை செய்வதற்கு இந்தக் கேள்வி பயன்பட்டிருக்கிறது. ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். உலகம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளைக் கண்காணிக்கும் அமைப்பு. எந்த நாட்டு அரசுக்கும் தனியாகப் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத தன்னிச்சையான நிர்வாகத்தைக் கொண்டது. வருவாயைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வரி செலுத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் லிமிடெட் கம்பெனியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்யும் நிறுவனங்களின் சொர்க்கபூமியான, மொனாக்கோ என்கிற குட்டிதேசத்தில்தான் இந்த நிறுவனம் முதலில் தொடங்கப்பட்டது. இப்போதும் அதே காரணத்துக்காக துபையை தலைமையிடமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தக் கிரிக்கெட் அமைப்பின் அங்கம்தான் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்கிற பிசிசிஐ. இதுவும் முழுக்க முழுக்கத் தனியார் அமைப்பு. கூட்டுறவு சங்கச் சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருப்பதால், இந்த அமைப்பின் லாப நஷ்டக் கணக்கை பொதுவில் வெளியிடுமாறு கோர முடியாது. அதாவது, சட்ட விதிகளின்படி கிட்டத்தட்ட இது ஒரு தொண்டு நிறுவனம். காமன்வெல்த் போட்டிகளில் ஊழல் நடந்தால் கேட்பதைப்போல கிரிக்கெட்டில் ஊழல் நடந்தால் கேட்க முடியாது. கிரிக்கெட் விளையாடுவதும் அதைப் பிரபலப்படுத்துவதும் சேவை என்பதாகக் கூறி பிசிசிஐ அமைப்புக்கு முழு வரி விலக்கு வழங்கப்பட்டிருந்தது. சில அரசு மைதானங்கள் அடிமாட்டு வாடகைக்கு பிசிசிஐக்குத் தரப்படுகின்றன. இந்திய இளைஞர்களுக்கு உதாரண புருஷர்களாகத் திகழும் பல வீரர்களும் வரிவிலக்கைப் பயன்படுத்தி விதவிதமான சலுகைகளை அனுபவித்திருக்கிறார்கள். சொகுசு கார்களுக்கு வரிவிலக்கு கோரி, சச்சின் போன்ற முன்னணி வீரர்கள் அரசுக்குக் கடிதம் எழுதிய கதைகளும் உண்டு. ஆனால், கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம்போல செயல்படும் பிசிசிஐ, ஐபிஎல் போட்டிகள் மூலமாகவும், பயிற்சி மையங்கள் மூலமாகவும், வேறு பலவகைகளிலும் கோடிகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. இந்த அமைப்பு செய்வது முழுக்க முழுக்க வியாபாரம் மட்டுமே. இந்தியா ஒரு வளரும் நாடு. ஏழைகள் நிறைந்த நாடு. ஆனால், இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அப்படிச் சாதாரணமானதல்ல. தனது பண பலத்தால், உலகின் மற்றக் கிரிக்கெட் வாரியங்களுக்கு உத்தரவிடும் அளவுக்கு அதிகாரம் கொண்டது.பிசிசிஐ நினைத்தால் எந்த நாட்டில் வேண்டுமானாலும் கிரிக்கெட் போட்டிகளை நடத்தலாம், அல்லது நிறுத்தலாம், மாற்றி அமைக்கலாம். எந்த அணியை வேண்டுமானலும் நசுக்கலாம். மேலே கொண்டு வரலாம். அந்த அளவுக்கு இந்திய மக்களின் தலைகளையும், கிரிக்கெட் ஆர்வத்தையும் சந்தைப்படுத்தி பிசிசிஐ செல்வாக்குப் பெற்று வந்திருக்கிறது. இந்தியாவில் போட்டியாக உருவாகும் எந்த அமைப்பையும் பிசிசிஐ வளரவிட்டதில்லை. வேறு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தால், இந்திய அணியில் ஆட முடியாது என்று வீரர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர். கபில்தேவ் தலைமையில் உருவான ஐசிஎல் நசுக்கப்பட்டது இப்படித்தான். அந்த அளவுக்குக் கிரிக்கெட்டை ஒட்டுமொத்தமாகக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டிருக்கிறது பிசிசிஐ. இந்தியாவின் எண்ணெய் வளம், 2ஜி அலைக்கற்றை போன்றவையெல்லாம் இயற்கை வளங்கள் என்றால், கிரிக்கெட்டும்கூட தேசத்தின் சொத்துதான். 2ஜி, 3ஜிக்கெல்லாம் ராயல்டி கேட்கும் இந்திய அரசு, எந்த ராயல்டியும் இல்லாமல் ஒரு தனியார் அமைப்பு இந்தியாவின் வளத்தை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டிருப்பதை எப்படி அனுமதிக்கிறது? இந்தக் கேள்வியைத்தான் அமைச்சர் எம்எஸ் கில் கேட்டார். இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை நிர்வகிக்கும் தலைமை அமைப்பு என்கிற அங்கீகாரத்தையும் பிசிசிஐயிடம் இருந்து பறித்தார். இப்போது விழித்துக் கொண்டிருக்கும் வருமான வரித்துறை பிசிசிஐ என்பது சேவை நிறுவனமல்ல, அது செய்வது பொதுநலப் பணியுமல்ல எனக் கூறிவிட்டது. லாபம் ஈட்டும் வியாபாரத்தை மேற்கொண்டிருக்கும் பிசிசிஐ இனி வரி செலுத்த வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. இந்த ஐசிசியும், பிசிசிஐயும் இணைந்துதான் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துகின்றன. இந்த உலகக் கோப்பைப் போட்டியில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 10 அணிகளுடன் வேறு 4 அணிகளும் பங்கேற்கின்றன.200-க்கும் மேற்பட்ட இறையாண்மை கொண்ட நாடுகள் இருக்கும் உலகில், வெறும் 10 நாடுகளுக்குத்தான் டெஸ்ட் கிரிக்கெட் ஆடத் தெரிந்திருக்கிறது. இந்த நூறு ஆண்டுகளில் ஐசிசியால் இதைத்தான் சாதிக்க முடிந்திருக்கிறது. கிரிக்கெட்டுக்கு இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருக்கும் மவுசைக்காட்டி கிட்டத்தட்ட 90 நாடுகளில் ஒப்புக்குச் சப்பாணியாக அணிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. முழுமையாகக் கிரிக்கெட் ஆடத் தெரிந்த வெறும் 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் மட்டும் பங்கேற்கும் ஒரு போட்டியை உலகக் கோப்பைப் போட்டி என்று கூறுவதே அபத்தம் இல்லையா?இதைக் கேட்டால், கால்பந்தைப்போல் நாங்களும்தான் தகுதிச் சுற்றுகள் நடத்துகிறோம் என்பார்கள். ஆனால், அதெல்லாம் ஒரு கணக்குக்காக மட்டும்தான் என்பது அந்தத் தகுதிச் சுற்றுப் போட்டிகளைப் பார்ப்பவர்களுக்குத் தெரியும். சாமான்ய இந்தியன் இதையெல்லாம் பார்ப்பதில்லை. தேசப்பற்று பணமாக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் அவன் கவலைப்படுவதில்லை. அவனுக்குத் தேவை இந்தியா என்கிற பெயரில் எந்த அணி ஆடினாலும் அது ஜெயிக்க வேண்டும். இதனால், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட அசாருதீன் எம்.பி. ஆகிறார்; பிசிசிஐ பற்றி கேள்வி எழுப்பிய கில் பதவியிலிருந்து மாற்றப்படுகிறார். இதுதான் இந்தியா.
No comments:
Post a Comment